Thursday, July 27, 2006

த்ரிஷாவுக்கு தனி கொடி


நடிகை த்ரிஷா ரசிகர் மன்றத்துக்கு புதிய கொடி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அவர் அரசியலுக்கு ஆயத்தமாகிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

‘லேசா...லேசா’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை த்ரிஷா, ‘சாமி’, ‘கில்லி’, ‘ஆதி’, ‘திருப்பாச்சி’, போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்று இன்று முன்னணி நடிகையாக இருக்கிறார்.

தமிழகத்தில் நடிகைகளுக்கு ரசிகர் மன்றம் வைப்பது முன்பொரு காலத்தில் இருந்தது. பின்னர், அந்தப் பழக்கம் நின்றுவிட்டது. பல ஆண்டுகளுக்குப் பிறகு த்ரிஷாவுக்கு ரசிகர் மன்றம் தொடங்கினார்கள். ‘தென்னகத்தின் கனவு தேவதை த்ரிஷா’ ரசிகர் மன்றம் என்று அதற்கு பெயர் வைத்துள்ளனர். ஜெசி என்பவர் தலைவராகவும், ராம்ராஜ் செயலாளராகவும், சுபாஷினி பொருளாளராகவும் இருந்து செயல்பட்டு வருகின்றனர். மன்றம் தொடங்கப்பட்டவுடன் 10 அனாதை குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கத் தொடங்கினர். த்ரிஷா கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தனர்.

இந்நிலையில், இன்று திடீரென த்ரிஷா ரசிகர் மன்றத்தின் கொடியை அறிமுகப்படுத்தி உள்ளனர். நீலம் மற்றும் சிவப்பு நிற வண்ணக் கொடியின் நடுவில் நட்சத்திரமும், அதற்குள் த்ரிஷாவின் படமும் இடம் பெற்றுள்ளது.

த்ரிஷா நடித்துள்ள ‘சம்திங், சம்திங் உனக்கும் எனக்கும்’ என்ற படம் இன்று வெளியானது. சென்னையில் இந்தப் படம் திரையிடப்பட்டுள்ள உதயம், ரோகினி, ஜெயந்தி, மகாராணி தியேட்டர்களில் மன்றக் கொடியை ஏற்றி படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு இனிப்பு வழங்கினார்கள். மடிப்பாக்கத்தில் உள்ள ஆர்.எஸ். மனவளர்ச்சி குன்றியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு விருந்து கொடுத்தனர். 10 ஏழை மாணவர்களுக்கு கல்லூரியில் படிக்க நிதி வழங்கினர்.

பல நடிகர்களுக்கு ரசிகர் மன்றங்கள் உள்ளன. ரஜினி, விஜயகாந்த் உள்பட சில நடிகர்களின் ரசிகர் மன்றத்தினர் தனிக்கொடியும் வைத்துள்ளனர். விஜயகாந்த், தனது ரசிகர் மன்ற கொடியை, இப்போது அரசியல் கட்சிக் கொடியாக மாற்றிவிட்டார். நடிகைகளை பொறுத்தவரை ரசிகர் மன்றம் தொடங்குவது புதிதில்லை என்றாலும் மன்றத்துக்கென தனிக்கொடி அறிமுகப்படுத்தி இருப்பதும், சமூக சேவைகளில் ஈடுபடுவதும் இதுவே முதல்முறை. புதிய கொடி அறிமுகப் படுத்தி இருப்பது, அரசியல் பிரவேசத்துக்கு த்ரிஷா தயாராகிறாரோ என்ற சந்தேகத்தை கிளப்பி இருக்கிறது.

இது பற்றி த்ரிஷாவின் அம்மா உமாவிடம் கேட்டபோது, ‘‘அரசியலுக்கு வரும் எண்ணமில்லை. அவள் சின்னப்பொண்ணு. இப்போதுதான் நல்ல படங்கள் வந்து கொண்டிருக்கிறது. அவள் பெயரில் ரசிகர்கள் நல்ல காரியம் செய்கிறார்கள். அதனால் சந்தோஷமாக மன்றம் வைக்க அனுமதி கொடுத்திருக்கிறோம். இதை தமிழ்நாடு முழுவதும் அமைப்பு ரீதியாக விரிவுபடுத்த இருக்கிறார்கள்.

த்ரிஷா பெயரில் ரத்த வங்கியும் அமைக்க இருக்கிறார்கள். இப்போது படப்பிடிப்பில் த்ரிஷா மும்முரமாக இருப்பதால் உடனடியாக தொடங்க முடியவில்லை. வரும் 31-ம் தேதி சென்னை வரும் த்ரிஷா கேன்சரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளோடு ஒரு நாள் முழுவதும் இருக்கப் போகிறாள். அவளுக்கு சமூக சேவையில் நிறைய ஆர்வம். அதற்குதான் மன்றம்’’ என்றார்.

0 Comments:

Post a Comment

<< Home